SEJARAH SEKOLAH

பள்ளி வரலாறு



இப்பள்ளி 1941ஆம் ஆண்டு வரை, ‘அலோர் பொங்சு பிரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி’ (Alor Pongsu Briah Estate Tamil School) எனும் பெயரில் இயங்கி வந்துள்ளது. 1946ஆம் ஆண்டில் இத்தோட்டத்திலுள்ள 20 x 12 அடி பரப்பிலான ஒரு சிறு குடிலில் 26 மாணவர்களோடு இப்பள்ளி நடைபெற்றுள்ளது. தலைமையாசிரியர் திரு.இரா.தண்ணீர்மலை அவர்கள், முதலாம் இரண்டாம் வகுப்புகளை மட்டும் கொண்டிருந்த இப்பள்ளியை நடத்தி வந்தார்.

பின்னர், 1953-ஆம் ஆண்டு இப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை நாற்பதை எட்டியது. 1958-ஆம் ஆண்டில் இப்பள்ளியின் பெயர் ‘Arumugam Pillai Tamil School’ (ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி) என மாற்றம் பெற்றது. இதற்குக் காரணம் அக்காலக் கட்டத்தில் இப்பள்ளி அமைந்திருந்த தோட்டம் திருமிகு.என்.டி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை என்பவரால் வாங்கப்பெற்றது. திருமிகு.என்.டி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை அவர்களின் ஆதரவில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டு, ஆகஸ்ட்டு மாதம் 1967ஆம் ஆண்டு, இப்போதிருக்கும் புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டது.

முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த இக்கட்டடம் 2.9.1967-ஆம் நாளில் முதல் செயல்படத் தொடங்கியது. இப்புதிய பள்ளியின் பெயர் ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, அலோர் பொங்சு, பாகான் செராய், பேரா என நிலைநிறுத்தப்பட்டது. 1974-ஆம் ஆண்டு, குடிநீர் வசதியும் 1988-ஆம் ஆண்டு, மின்சார வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டது. 2001-ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் நடுவண் அரசு பள்ளிக்கு மேலும் ஒரு கணினியை வழங்கியது. 2002ஆம் ஆண்டு, டிசம்பரில் பள்ளி வளாகத்தைச் சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டது.

அதே ஆண்டில் ஆங்கில மொழியில் கணிதம், அறிவியல் பாடங்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்காக அரசு மூன்று மடிக்கணினிகளையும் 34” தொலைக்காட்சியையும் பல துணைக்கருவிகளையும் வழங்கியது. தற்போது இப்பள்ளி ஒரு தலைமையாசிரியர், நான்கு ஆசிரியர்கள், ஓர் எழுத்தர், ஓர் ஊழியர், இரண்டு தனியார் துறை காவலர்கள் ஆகியோரின் கீழ் பத்தொன்பது மாணவர்களோடு சிறப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இப்பொழுது பள்ளியில் குடிநீர், மின்சாரம், தொலைபேசி, இணையம் ஆகிய அனைத்து ஏதுக்களும் இருக்கின்றன. மேலும் கழிப்பறைகள், திடல், அறிவியல் கூடம், நூலகம், தகவல் தொடர்பு தொழில்நுட்ப நடுவம் முதலியவைகளும் அமையப் பெற்றுள்ளன. அண்மைய சில ஆண்டுகளாகவே இப்பள்ளி கல்வி நிலையில் சிறந்து விளங்கிவருகின்றது. யு.பி.எஸ்.ஆர் மதிப்பீட்டுத் தேர்வில் 2000-ஆம் ஆண்டில் 60% தேர்ச்சியும், 2001-ஆம் ஆண்டில் 57.1% தேர்ச்சியும், 2002, 2003 ஆகிய இரு ஆண்டுகளும் தேர்ச்சி நிலை அதிகரித்து 66.7% விழுக்காடு அடைந்துள்ளது. 2004, 2005-ஆம் ஆண்டுகளில் யு.பி.எஸ்.ஆர் தேர்வில்100% விழுக்காட்டுத் தேர்ச்சியை அடைந்தது. 2006ஆம் ஆண்டு 50% விழுக்காட்டுத் தேர்ச்சி நிலையை அடைந்தது.